மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாமநத்தம் ஊராட்சியில் 100 நாள் வேலை என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் லட்சக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேட்டில் சாமநத்தம் ஊராட்சியிக்கு பல லட்சங்கள் நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் புகார்:
இந்த முறைகேடு குறித்து சமூக ஆர்வலர்கள் மதுரை குமரேசன் அவர்கள் சம்மந்தப்பட்ட திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புகார் அளித்துள்ளார். அதில் இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட நிதியினை சம்மந்தப்பட்ட நபர்களிடம் இருந்து திரும்ப பெறுவதுடன்

இதில் சம்மந்தப்பட்டவர்களின் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரோ நிதியினை சம்மந்தப்பட்ட நபர்களிடம் இருந்து திரும்ப பெறாமல், துறை சார்ந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடைநிலை பணியில் உள்ள பணித்தள பொறுப்பாளரை மட்டும் பணியில் இருந்து நீக்கிவிட்டு தொகையினை வசூலிக்காமல் பெயரளவில் நடவடிக்கை எடுத்திருப்பது இந்த ஊராட்சியில் நடைபெறும் ஊழலுக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து சாமநத்தம் ஊராட்சியை சேர்ந்த மாரி பாண்டி கூறுகையில் இந்த ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாவட்ட குறைதீர் அலுவலர் அவர்களிடம் புகார் அளித்ததன் பேரில் அவர் நேரில் வந்து விசாரணை நடத்தி ஊழல் நடைபெற்றது உண்மை தான் என்றும், அந்த நிதி முறைகேடு குறித்து
திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பியுள்ளார். இதுவரை இந்த அறிக்கையின் மீது திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களை காப்பாற்றுவதற்கா அல்லது இந்த ஊழலுக்கு துணை போகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.